Search This Site

Wednesday, November 22, 2006

Chennai High Court Stays Special TNPSC

சென்னை :

அரசுப் பணியில் கடந்த 2003ம் ஆண்டு நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்கள் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை நிரந்தரப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்காலிக ஊழியர்களைப் பொறுத்தவரை தற்போதையை நிலையே தொடர வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் எம்.ஞானசேகர் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 2003ம் ஆண்டு அரசு ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக பணியில் இருந்து அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். டிஸ்மிஸ் செய்யப்பட்ட இடங்களில் தற்காலிகப் பணியாளர்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்ந்தெடுத்து அரசு நியமித்தது. இவ்வாறு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை ஒப்பந்த முறையில் இளநிலை உதவியாளர்களாக அரசு நியமித்தது. இவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்படவில்லை. பணியில் இவர்களை நியமிக்கும் போது "தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவதாகவும் பிற்காலத்தில் இதை வைத்து பணியில் உரிமை கோர மாட்டோம்' என்றும் அவர்களிடம் உத்தரவாதம் பெற்றனர்.

தற்போதைய நிலையில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 7 ஆயிரத்து702. அப்படியிருக்கும் போது எப்படி 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியில் தொடர அனுமதிக்கின்றனர் என்பது தெரியவில்லை. அரசின் செயலர்கள் கூட்டத்தில் நடந்த விவாதத்தின் அடிப்படையில் கடந்த 19ம் தேதி ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கென்று டி.என்.பி.எஸ்.சி., மூலம் குரூப்4 அளவில் தேர்வு நடத்தி இளநிலை உதவியாளராக பணிக்கு தேர்ந்தெடுப்பது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் குரூப்4 அளவில் சிறப்புத் தேர்வு நடத்துமாறு டி.என்.பி.எஸ்.சி.,யையும் கேட்டுக் கொண்டுள்ளது.

இத்தகைய உத்தரவை பிறப்பிப்பதற்கு தமிழக அரசுக்கு அதிகார வரம்பில்லை. இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது டி.என்.பி.எஸ்.சி.,யின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. ஒப்பந்த ஊழியர்களை கொண்டு முழுவதுமாக அதை நிரப்ப முடியாது. ஒப்பந்த ஊழியர்களுக்காக மட்டுமே சிறப்புத் தேர்வு நடத்துவது என்பது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பேர்களை புறக்கணிப்பதாகும். இது சட்டவிரோதமானது. ஒப்பந்த ஊழியர்களை பணியில் நியமிக்கும் கட்டத்தில் அவர்களது பணி நிபந்தனைகள் பற்றி அவர்களுக்கு கூறப்பட்டுள்ளது. ஒப்பந்த ஊழியர்களை தேர்ந்தெடுக்கும் போது இடஒதுக்கீட்டை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட சீனியாரிட்டியை அரசு பின்பற்றவில்லை.

எனவே, கடந்த 19ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு நேற்று தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சந்துரு ஆகியோர் அடங்கிய "முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. இம்மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது. தற்காலிக ஊழியர்களைப் பொறுத்தவரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment